அமெரிக்க முன்னாள் அதிபரும், குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளருமான டொனால்ட் டிரம்பை மீண்டும் கொல்ல முயற்சி நடந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை நடந்த இரண்டாவது படுகொலை முயற்சியில் அவர் உயிர் பிழைத்தார். புளோரிடா மாகாணத்தில் உள்ள வெஸ்ட் பால்ம் பீச்சில் உள்ள தனது கோல்ஃப் மைதானத்தில் டிரம்ப் விளையாடிக் கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது.

ட்ரம்பின் கோல்ஃப் மைதானத்திற்கு அருகே உள்ள புதர்களில் துப்பாக்கி ஏந்திய நபரை அமெரிக்க உளவுத்துறையின் முகவர்கள் பார்த்து அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அமெரிக்க புலனாய்வு அமைப்பான FBI அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த மர்ம நபரிடம் ஏகே 47 ரக துப்பாக்கி இருந்ததாக கூறப்படுகிறது. அந்த தற்போது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.


சந்தேக நபர் ஹவாய் நாட்டைச் சேர்ந்த ரியான் வெஸ்லி ரூத் (58) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. இதை பற்றி பால்ம் பீச் கவுண்டி ஷெரிப் ரிக் பிராட்ஷா கூறுகையில், உளவு துறை அதிகாரிகள், அந்த மர்ம நபரை 365 முதல் 457 கெஜம் தொலைவில் கண்டுபிடித்து, அவர் மீது குறைந்தது நான்கு ரவுண்டுகள் சுட்டனர்.

உளவு துறை அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து சந்தேக நபர் தனது துப்பாக்கியை தரையில் வீசினார். இரண்டு பைகள் மற்றும் பிற பொருட்களை தூக்கி எறிந்துவிட்டு கருப்பு நிற நிசான் காரில் தப்பிச் சென்றார். 

இந்த தாக்குதல் முயற்சிக்குப் பிறகு, டொனால்ட் டிரம்ப், "எனது உயிரை கொல்ல மற்றொரு முயற்சிக்குப் பிறகு எனது தீர்மானம் மேலும் வலுப்பெற்றுள்ளது. பயப்பட வேண்டாம்! நான் பாதுகாப்பாகவும் நலமாகவும் இருக்கிறேன். யாருக்கும் காயம் ஏற்படவில்லை. கடவுளுக்கு நன்றி! ஆனால், அங்கே இந்த உலகில் நான் உங்களுக்காக சண்டையிடுவதை ஒருபோதும் நிறுத்த மாட்டேன், நான் ஒருபோதும் சரணடைய மாட்டேன் அமெரிக்காவை மீண்டும் சிறந்த நாடாக மாற்றுவோம். என X வலைத்தளத்தில் ஒரு இடுகையில் கூறியுள்ளார்.

இதற்கு முன், டிரம்ப் 13 ஜூலை 2024 அன்று தாக்கப்பட்டார். அவர் பென்சில்வேனியாவின் பட்லரில் ஒரு பேரணியில் உரையாற்றினார். இதன் போது ஒரு தாக்குதல்தாரி அவர் மீது துப்பாக்கியால் சுட்டுள்ளார். அந்த தோட்டா டிரம்பின் காதில் பாய்ந்தது.