இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம் பரபரப்பான டையில் முடிந்தது. மிகவும் விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இலங்கை அணி கேப்டன் சரித் அஸ்லங்கா இந்தியாவிடம் இருந்து வெற்றியைப் பறித்தார். இந்திய அணிக்கு இரண்டு விக்கெட்டுகள் மீதம் இருந்தபோது, 15 பந்துகளில் ஒரு ரன் எடுக்க வேண்டியிருந்தது, ஆனால் அஸ்லங்கா இரண்டு பந்துகளில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியை ஆல் அவுட் செய்து போட்டியை சமன் செய்தார். போட்டியின் ஆட்ட நாயகனாக வெலாலகே தேர்வானார்.

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் ஒரு நாள் போட்டி கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இலங்கை அணி 8 விக்கெட் இழப்புக்கு 230 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் பதும் நிஸ்ஸங்க 56 ரன்கள் குவித்தார். அவிஷ்க பெர்னாண்டோ 1 ரன்னில் முஹம்மது சிராஜ் பந்தில் அவுட் ஆனார். 



அடுத்து களம் இறங்கிய குசல் மெண்டிஸ் 14 ரன்களையும் மற்றொரு வீரரான சதீர சமரவிக்ரம 8 ரன்களையும் எடுத்தனர். கேப்டன் சரித் அசலங்கா 14 ரன்கள் எடுத்தார். ஜனித் லியனகே 20 ரன்களை எடுத்தார். மத்திய வரிசையில் வந்த துனித் வெலலகே அனல் பறக்கும் இன்னிங்ஸை ஆடி 65 பந்துகளை எதிர்கொண்டு 2 சிக்ஸர்கள் மற்றும் 7 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 67 ரன்களை குவித்தார். வனிந்து ஹசரங்க 24 ரன்களையும், அகில தனஞ்சய 17 ரன்களையும் எடுத்தனர். இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் அர்ஷ்தீப் சிங், அக்சர் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ்-சிவம் துபே-குல்தீப் யாதவ்-வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

பிறகு, இலக்கை துரத்திய இந்திய அணி சிறப்பாக ஆட்டத்தை தொடங்கியது. இந்திய அணி தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா 47 பந்துகளில் 58 ரன்கள் குவித்தார். ரோஹித் 3 சிக்ஸர்கள் மற்றும் 7 பவுண்டரிகளை விளாசினார். ஷுப்மன் கில் 16 ரன்கள் எடுத்தார். விராட் கோலி 24 ரன்கள் எடுத்தார். வாஷிங்டன் சுந்தர் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். ஷ்ரேயாஸ் ஐயர் 23 ரன்களும், லோகேஷ் ராகுல் 31 ரன்களும் எடுத்தனர். அக்சர் படேல் 33 ரன்களும், சிவம் துபே 25 ரன்களும் எடுத்தனர். 



அடுத்து களம் இறங்கிய குல்தீப் யாதவ் 2 ரன்கள் எடுத்தார். சிராஜ் 5 ரன்கள் எடுத்தார். 48வது ஓவர் நடந்து கொண்டிருந்தது. இந்தியா இலங்கையின் ஸ்கோரை சமன் செய்தது மற்றும் இரண்டு விக்கெட்டுகள் எஞ்சியிருந்தன. இந்திய அணியின் வெற்றிக்கு 15 பந்துகளில் 1 ரன் தேவைப்பட்டது. கேப்டன் சரித் அஸ்லங்கா பந்துவீசிக்கொண்டிருந்தார். அவர் 47.4 ஓவரில் ஷிவம் துபேயை எல்பிடபிள்யூ முறையில் அவுட் ஆக்கினார். இதன்பிறகு, அர்ஷ்தீப் சிங் மீண்டும் முதல் பந்திலேயே எல்பிடபிள்யூ முறையில் அவுட் ஆனதால், இந்திய அணி ஆட்டம் டையில் முடிந்தது.